கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மக்களை வாட்டி வதைத்து வருகிறது, ஆனாலும் தமிழக அரசு சாமர்த்தியமாக செயல்பட்டு மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்துவருகிறது. அதற்காக இரவு பகலாக பணியாற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சியாலும், கோடை வெயிலின் தாக்கத்தினாலும் தண்ணீர் தட்டுப்பாடு மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த வறட்சியின் உக்கிரத்திலிருந்து சென்னையின் குடிநீர் தாகத்தை தீர்க்க இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு பணியாற்றி வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து கொண்டே செல்வதால், மாற்று நீர் ஆதாரங்கள் மூலமாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, பொதுப்பணித் துறையும், சென்னை குடிநீர் வாரியமும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர் நிலைகளாக உள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால், 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த 4 ஏரிகளும், முழுக் கொள்ளளவை எட்டாமல் போனதுடன், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு குறைந்த அளவிலேயே கிருஷ்ணா நீர் திறக்கப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாகவே செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர் இருப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. தொடர்ந்து செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் பெரும் பகுதிகள் வறண்டன. இதனால் கடந்த ஏப்ரம் மாத இறுதியில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மே 1ஆம் தேதி சோழவரம் ஏரியிலிருந்து மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சுவது நிறுத்தப்பட்டது.
3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட பூண்டி ஏரியில் 59 மில்லியன் கன அடி நீரும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், ஒரு மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளன.
அதே போல் ஆயிரத்து 81 மில்லியன் கன அடி அளவு கொண்ட சோழவரம் ஏரியில், 2 மில்லியன் கன அடி நீரும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட புழல் ஏரியில், 3 மில்லியன் கன அடி அளவிலேயே தண்ணீர் இருப்பு உள்ளது.
புழல் ஏரியின் பெரும் பகுதிகள் வறண்டதால், குடிநீருக்காக இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஏரியில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி உள்ள தண்ணீரை, தற்காலிக கால்வாய்கள் மூலம் புழல் ஏரியில் உள்ள ஜோன்ஸ் டவர் அருகே ஒன்று திரட்டி, அங்கிருந்து ராட்சத மோட்டார் மற்றும் குழாய்கள் மூலம் கடந்த ஒன்றரை மாதங்களாக உறிஞ்சி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
புழல் நீர்த் தேக்கம், பூண்டி ஏரி, விவசாயிகளின் கிணறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது என விளக்குகிறார், புழல் நீர் தேக்க நிர்வாக மேலாளர் இளவரசன்.
நாள் ஒன்றுக்கு, சென்னையின் சராசரி தண்ணீர் தேவை 830 மில்லியன் லிட்டர், அதாவது 83 கோடி லிட்டர் தேவைப்படுகிறது. பருவமழை பொய்த்துப் போனதாலும், வளர்ந்து வரும் நகர சூழலின் தேவையாலும், 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையை போக்க மாற்று ஏற்பாடுகளை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொறுத்தவரையில் நாளொன்றுக்கு, 300 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் அளவிற்கு திறன் கொண்டது. அங்கிருந்து தற்போதைக்கு 85 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து சென்னைக்கு வழங்கி வருகின்றனர்.
பூண்டியிலிருந்து 35 மில்லியன் லிட்டர் தண்ணீர், விவசாய கிணறுகளிலிருந்து 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் , வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்காக பெறப்படுகிறது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம், 180 மில்லியன் லிட்டர் தண்ணீர், சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகள் மூலம் 35 மில்லியன் லிட்டர் தண்ணீர், குவாரிகள் மூலம் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் என மொத்தமாக, 525 மில்லியன் லிட்டர் தண்ணீரை நாள் ஒன்றுக்கு தமிழக அரசு குடிநீர்வாரியம் மூலமாகக் கொடுத்து, சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. .
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 320 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வாறாக சென்னையின் 65 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
விவசாய நிலங்களிலிருந்து தண்ணீரை வழங்க முன்வந்துள்ளீர்களே ஏன்? – என விவசாயிகளிடம் கேட்ட போது
சிக்கராயபுரத்தில் மொத்தம் 25 கல்குவாரி குட்டைகள் உள்ளன. ஒவ்வொன்றும் 150 அடி முதல் 300 அடி வரை ஆழம் கொண்டவை. கடந்த 2017ஆம் ஆண்டில், 23 குவாரிகளில் இருந்து, தண்ணீர் எடுக்கப்பட்டது. இம்முறை, அனைத்து குவாரிகளில் இருந்தும் நீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு, கல்குவாரி குட்டைகளில் இருந்து, 100 நாட்கள் வரை தண்ணீர் எடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 120 நாட்கள் வரை தண்ணீர் எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த, 2017ஆம் ஆண்டில் மொத்தம் 300 கோடி லிட்டர் நீர் எடுக்கப்பட்டது.
இப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள 25 கல்குவாரிகளில் இருந்து, தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, இதற்காக, குட்டைகளில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை பொருத்தப்பட்டுள்ள ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணி முடிக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டமாக, கல்குவாரி குட்டைகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, சோதனை ஓட்டமாக, நாள் ஒன்றுக்கு, 50 முதல் 70 லட்சம் லிட்டர் நீர், கல்குவாரியில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. முழுவீச்சில் கல்குவாரி நீரை பயன்படுத்தும் போது, தினசரி 3 கோடி லிட்டர் நீர் எடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக, இந்தாண்டு 400 கோடி லிட்டர் நீர் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை என மூன்று பகுதிகளுக்கும் இராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரானது மெட்ரோ நீர் வழங்கல் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வட சென்னையில் படேல் நகர், வியசார்பாடி பகுதிகளுக்கும்,
மத்திய சென்னையில் கொளத்தூர், அண்ணாநகர், கொரட்டூர், சிட்கோ நகர், புழல் ஆகிய பகுதிகளுக்கும்,
தென் சென்னையில் அம்பத்துர், மாதவரம் ஆகிய பகுதிகளுக்கும் புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தண்ணீர் குழாய் மூலம் சென்றடைகிறது. அங்கிருந்து தண்ணீர் தெருவாரியாகக் கொண்டு சேர்க்கப்படுகிறது.
மக்களுக்கு தண்ணீர் வழங்கும் இந்தப் பணிகளில், 118 பேர் ஈடுபடுகிறார்கள். இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 35 பேர் என்ற கணக்கில், மூன்று ஷிப்டுகளாக பிரித்து, 24 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.
தற்போது தினசரி 7 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம், தண்ணீரானது சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மேலும், 10 ஆயிரம் டேங்கர் லாரி மூலம் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மழை கைவிட்டாலும், வறட்சி வாட்டி வதைத்தாலும், மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் தேவைகள் தீர்க்க தமிழக அரசு உழைக்கும் என்ற உண்மையை, தடையற்ற அரசின் பணிகள் மக்களுக்கு உணர்த்தி வருகின்றன.
Discussion about this post