கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையை சுற்றுலாத் தலமாக செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ள வள்ளலார் பக்தர்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
வடலூரில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற புனித தலங்களில் வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையும் ஒன்று. இந்த சிறப்பு மிக்க வள்ளலார் தெய்வ நிலையத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுலா தலமாக்கவும், தமிழக அரசின், சுற்றுலாத்துறையின் மூலம் 2 கோடியே17 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் அமைத்த சத்தியஞான சபையில், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு மாதப் பூச நட்சத்திர காலத்திலும், தை மாதத்தில் வரும் தைப்பூச திருவிழாக் காலங்களிலும், இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த வருகை தந்து ஜோதி தரிசனம் காண்பார்கள்.
இந்நிலையில் வள்ளலார் சத்திய ஞான சபையை சுற்றுலா தலமாக செயல்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக, கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் குழு, வள்ளலார் தெய்வ நிலையத்தில் முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சத்திய ஞான சபையில், தார்ச் சாலை அமைத்தல், சுற்றுலா வரும் முதியோர்களுக்கு தங்குவதற்கு கட்டிடம், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிவறை மற்றும் குளியலறை, ஞானசபையை சுற்றிலும் சூரிய மின் ஒளி திட்டம், ஒரு இலட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், ஆழ்துளை கிணறு உள்ளிட்டவை அமைத்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடிவில் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இத் தகவல்கள் வள்ளலார் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதற்காக தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய பாதையில் ஏழை எளிய மக்களுக்காகவும், அறநெறிகளை போற்றிக்காக்கும் அரசாகவும் தற்போதைய அதிமுக அரசு கோலோச்சி வருவதாக பக்தர்களும் பொதுமக்களும் தெரிவிப்பது நிதர்சனமே…..
Discussion about this post