மாநிலங்களின் எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சுதந்திர இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுந்தது. மக்களின் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படும் போதுதான் மாநில எல்லைகளுக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும் என்று பல மாநில மக்களும் மத்திய அரசிடம் வாதிட்டனர். இதனால் 1956 ஆம் ஆண்டில், ‘மாநில மறு சீரமைப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டது.
இந்த சட்டத்தின் மூலம் 1956 ஆம் ஆண்டின் நவம்பர் 1 ஆம் தேதி ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களோடு தமிழகமும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் தெற்கு எல்லையும், சங்ககாலத்தில் இருந்து தமிழகத்தின் தெற்கு எல்லையுமான கன்னியாகுமரி இந்நாளில்தான் தமிழகத்துடன் மீண்டும் இணைந்தது. இந்த இணைப்பு மட்டும் நடக்காமல் போயிருந்தால் மூவேந்தர்களில் சேரர்கள் ஆண்ட நிலப்பரப்பை நாம் கேரளாவிடம் முற்றிலுமாக இழந்திருப்போம். அந்த அடிப்படையில் மீண்டும் ஒன்றுபட்ட தமிழகம் உருவான நாள் இந்த நவம்பர் 1ஆம் தேதிதான்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகியவை நவம்பர் 1 ஆம் தேதியை நெடுங்காலமாக அரசு விழாவாகக் கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த நாள் முன்னர் கொண்டாடப்பட்டது இல்லை. இதனைத் தமிழ் உணர்வாளர்கள் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
நவம்பர் 1 ஆம் தேதியின் வரலாற்று முக்கியத்துவத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் என எண்ணிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இவ்வாண்டு கூடிய தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ‘தமிழ்நாடு தினம்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின்படி இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் ‘தமிழ்நாடு தினம்’ என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த அறிவிப்பை பின்னர் தமிழக அரசு அரசாணையாகவும் வெளியிட்டது. இந்த அரசாணையின்படி இந்த நவம்பர் 1 ஆம் தேதி தமிழக வரலாற்றின் முதல் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் தமிழ் அறிஞர்களுக்கும் தமிழ் மொழிக்கும் சிறப்பு செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடத்தப்பட உள்ளன.
இந்த தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமின்றி தமிழினத்தின் வரலாற்றிலும் அதிமுக ஆட்சிக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் புகழுக்கும் ஒரு நீங்காக இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது – என்பதை யாரும் மறுக்க முடியாது.
Discussion about this post