வீட்டுத் தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில், ‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை சார்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை ஒப்புயர்வு மையத்தை முதலமைச்சர் காணொலி மூலம் துவக்கி வைத்தார். மேலும், 4 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 80 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கல்வியியல் கட்டடம் உட்பட பல்வேறு கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக, அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் அம்மா உடல் பரிசோதனை மையம் மூலமாக வழங்கப்படும் “அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு” பெட்டகத்தை மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அலுவலருக்கு முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள “அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு” பெட்டகத்தில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், Digital Thermometer கருவி, 14 முகக் கவசங்கள், கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரணம் மாத்திரைகள், 14 வைட்டமின் சி மாத்திரைகள், 14 Zinc மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள், கோவிட் கையேடு ஆகியவை உள்ளன.
அதை தொடர்ந்து, மருத்துவத் துறையில் காலியாக உள்ள 363 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி சார்பில் எல்.இ.டி திரை பொருத்தப்பட்ட 30 கொரோனா விழிப்புணர்வு வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு தலா 2 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாகனங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறும்படம், முதலமைச்சரின் விழிப்புணர்வு உரை ஆகியவை ஒளிபரப்பப்படும்.
இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ், டெங்கு காய்ச்சல் மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து 10 லட்சம் வீடுகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதுகுறித்த கையேடுகளை மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு வழங்கினார்.
இதையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களுக்கு செல்போன் மூலம் வாழ்த்து செய்தியை முதலமைச்சர் அனுப்பி வைத்தார்.
பின்னர் நேப்பியர் பாலம், டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகள் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
விழாவில், நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு வசதி கழகத்தின் 2019 -20ம் ஆண்டுக்கான ஈவு தொகையான 7 கோடியே 44 லட்ச ரூபாய்க்கான காசோலையை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சரிடம் வழங்கினார்.
கடலூரில் வேளாண் துறை சார்பில் 3 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
2018 – 2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், கடலூர் மாவட்டம் மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 3 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையம் அமைக்கப்பட்டது. இதில், இடுபொருள்களை கையாளுவதற்கு 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, உலர்களம், எடை மேடை, மின்னணு தராசுகள், மாவு தயாரிக்கும் இயந்திரம் மற்றும் தானியங்கி நிரப்பும் இயந்திரம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமை செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் செயல்படும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் காலியாக உள்ள 505 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post