இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலம் தமிழ்நாடு தான் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 75 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 570 பேர் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் நோய் தொற்று கண்டறியப்பட்டு, நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடலூர் மாவட்டத்தில் போதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரோனா வைரஸூக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லையென்றாலும், தங்களது திறமையால் நோய் தொற்று ஏற்பட்டவர்களை மருத்துவர்கள் குணமடைய செய்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கடலூரில், முதலமைச்சரின் குறைதீர் கூட்டங்கள் மூலம் 38 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 554 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தார். கடலூர் துறைமுகம் 135 கோடி ரூபாய் மதிப்பில் ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், வணிக கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக கடலூர் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
Discussion about this post