தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளோடு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று மதியம் ஆலோசனை மேற்கொள்கிறார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் அதற்காக செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பது முறைகேடான பண பரிவர்த்தனைகளை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 316 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பிற்காக 200 கம்பெனி துணை ராணுவப்படை தேவையென தமிழக தேர்தல் அதிகாரி கோரியுள்ள நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எத்தனை துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
Discussion about this post