குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பல்வேறு பணிகளுக்காக சாலையில் குழி தோண்டும்போது கேபிள்கள் பழுது அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காடு பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது பதிலளித்த அவர், ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வம்பன் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க அரசு ஆவணம் செய்யும் என்றார்.
கஜா புயலின் போது மரங்கள் விழுந்த இடங்களில் புதிய மரங்களை வளர்க்க விதைகள் தூவப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கும்பகோணம் தொகுதி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 918 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரூராட்சிகளில் சாலைகள் போடப்பட்டிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதனை கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு எந்த காலத்திலும் அனுமதி வழங்காது என்று, சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக திமுக கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இதுநாள் வரை அரசு அனுமதி வழங்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
Discussion about this post