செம்மொழியான தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் “சொற்குவை இணையம்”

உலகத் தமிழ் மாநாட்டை முதன் முறையாக தமிழ்நாட்டில் நடத்தி வரலாறு படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவரது வழியில் தமிழை வளர்க்க தமிழக அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழின் ஒரு கோடி வார்த்தைகளை சேமித்து பிரபலப்படுத்தும் சொற்குவை இணையதளமும் அதில் ஒன்று.

ஒரு நாட்டை காப்பாற்றுவதற்கு படை வீரர்கள் எந்த அளவிற்கு தேவையோ, அந்த அளவிற்கு மொழியை காப்பதற்கு சொற்கள் தேவை. சொற்களை பாதுகாத்து புழக்கத்தில் வைத்திருந்தால் தான் மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

அந்தவகையில், இனி வரும் தலைமுறையினருக்கு பயன்படும் வகையில், மொழியில் வழங்கும் சொற்கள் அனைத்தையும் தொகுத்து ஆவணப்படுத்தி ‘சொற் குவை’ என்ற ஒரு புதிய இணையதளம் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் கீழ் இயங்கும் அகரமுதலித் திட்ட இயக்கம் இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோவில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் சொற்குவை என்ற இணையதளம் அறிமுகம் செய்யபட்டது.

ஆங்கிலத்தில் உள்ள ஒரு அரிய சொல்லுக்கு தமிழில் என்ன பொருள், இலக்கியத்தில் என்ன பொருள், மேலும் ஒருசொல் எப்படி உருவாகி உள்ளது போன்ற சந்தேகத்தையும் கேட்டு தெளிவு பெற, 14469 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பொதுமக்கள், அறிஞர்கள், மாணவர்கள் மொழி சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மொழி சார்ந்த அறிஞர்களைக் கொண்டு தனித்தனியாக குழுக்கள் அமைத்து கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தந்த துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்தைகளும் தமிழாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் இளைஞர்கள் தமிழ் ஆர்வலர்கள், பிறமொழி வார்த்தைகளுக்கு சரியான சொற்களை கொடுத்தால் தங்களின் குழு அதனை பரிசீலனை செய்து அவற்றையும் அகராதியில் சேர்த்துக் கொள்வதாகவும் மாணவர்கள் தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய சொற்களை தெரிவிக்க கல்லூரிகளில் சொற்குவை சொல் உண்டியலை நிறுவி இருப்பதாக கூறுகிறார் அகரமுதலியின் திட்ட இயக்குனர் தங்க காமராசு.

சொற்குவை திட்டம் கலைச்சொற்களை தமிழ் படுத்தி படிக்க பயனுள்ளதாய் இருப்பதாகவும், அகர முதலித்திட்ட இயக்கத்தின் மூலம் தமிழ் சொற்களை தெளிவாக கற்று வருவதாகவும் கல்லூரி மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொற்குவைத் திட்டத்தை உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களும், மொழியியல் ஆய்வாளர்களும் பயன்படுத்துவதன் மூலம் யுனெஸ்கோவின் மொழி வரிசைப் பட்டியலில் 14 ஆம் இடத்திலுள்ள தமிழ்மொழி 10 ஆம் இடத்திற்கு முன்னேற்றம் காண்பதற்கான வழிவகை அமையும் என்று கருதப்படுகிறது.

செம்மொழியான தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் தமிழக அரசின் இந்த புதிய முயற்சிக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version