மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி தேவையான பெரும்பான்மையைப் பெற்றுள்ள போதும் முதலமைச்சர் பதவியை சிவசேனா விரும்புவதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்கிற சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்து வருகிறது. ஏழாம் தேதிக்குள் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என அமைச்சரும் பாஜக தலைவருமான சுதிர் முங்கந்திவார் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மும்பையில் பேசிய சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத், பாஜகவுடன் இனிப் பேசுவதாக இருந்தால் முதலமைச்சர் பதவி பற்றி மட்டுமே பேசப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பமாகத் தேசியவாதக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் சரத்பவார் நடத்தியுள்ளார். இதில் சிவசேனா ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவளிக்கலாம் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Discussion about this post