ஆப்கானிஸ்தானில், கிளர்ச்சியாளர்களை கண்டறிய, வீடு, வீடாக சென்று தாலிபன்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தாலிபன்களுக்கு பயந்து, பொதுமக்கள் இருப்பிடத்தை விட்டு அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். காபூல் விமானநிலைய தடுப்புகளில் ஏறி விமான நிலையத்திற்குள் வர முயன்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் மக்களை, அமெரிக்க ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நிற்கும் தாலிபான்கள், துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்துவதால், எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் ஆப்கான் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். விமான நிலையத்தின் வெளியே நின்றிருந்த 6 ஆயிரம் அமெரிக்கர்களில், மூன்றாயிரம் பேரை முதற்கட்டமாக அமெரிக்கா மீட்டுள்ளது. இதனிடையே, காபூலில், கோஸ்ட் உள்பட பல்வேறு மாகாண சாலைகளில் பெண்கள் மற்றும் பொதுமக்கள், 100 மீட்டர் நீள தேசிய கொடியை சாலையில் எடுத்துச் சென்று, தாலிபன்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பி பேரணியாக சென்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நேட்டோ மற்றும் முன்னாள் ஆப்கான் அரசிற்காக பணியாற்றியவர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களை, வீடு, வீடாக சென்று தேடும் பணியில் தாலிபன்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தாலிபன்கள் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தி வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சம் காரணமாக, சுமார் ஒரு கோடி பேர் உணவின்றி தவித்து வருவதாகவும் ஐ.நா. கூறியுள்ளது. இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்துவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
Discussion about this post