மகளிர் இருபது ஓவர் உலககோப்பையை ஆஸ்திரேலியா வென்றது!

சர்வதேச மகளிர் இருபது ஓவர் உலககோப்பையானது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியினை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்கா அணி. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலியும் பெத் மூனியும் களத்தில் இறங்கினர். 18 ரன்கள் சேர்த்த நிலையில் அலிசா ஹீலி பெவிலியன் திரும்ப, பெத் மூனி இறுதி வரை களத்தில் நின்று அரை சதம் அடித்தார். அவர் மொத்தமாக 74 ரன்கள் குவித்து தன் விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்றார். கேப்டன் மெக் லேனிங், எலிஸ் பெர்ரி போன்றோர்கள் பெரிதாக ரன்கள் எதுவும் குவிக்காமல் ஆட்டமிழந்தார்கள். ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் முடிவில் 156 ரங்கள் எடுத்து 6 விக்கெட்டுக்களை விட்டுக்கொடுத்திருந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக சப்னிம் இஸ்மாயில், மேரிசேன் கப் போன்றோர்கள் தலா இரண்டு விக்கெட்கள் எடுத்திருந்தனர்.

157 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் லாரா வோல்வார்ட்டினத் தவிர வேறு யாரும் பெரிதாக ரன்கள் எதுவும் குவிக்கவில்லை. அவர் அதிக பட்சமாக 48 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டமுடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைத் தன் வசப்படுத்தினர். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ப்ளேயர் ஆப் த மேட் விருதினைப் பெற்றார். அதேபோல இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே கார்டினர் ப்ளேயர் ஆப் த டோர்னமண்ட் விருதினைப் பெற்றார்.

Exit mobile version