நம் வாழ்வில் சிறந்த நண்பனாய், ஆசிரியராய், வழிகாட்டியாக விளங்கும் அப்பாக்களை போற்றும், தந்தையர் தினம் இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது… தியாகத்தின் சின்னமாக போற்றப்படும் தந்தையர்களை கவுரவிக்கும் எண்ணம் எப்போது தோன்றியது.பத்து மாதங்கள் தாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம்….. பட்ட கஷ்டம் என் பிள்ளையும் படக்கூடாது என்று அனுதினமும் உழைப்பவர். இத்தகைய சிறப்பு மிக்க தந்தையை வாழ்த்த இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், இந்தியா உள்ளிட்ட 52 நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகள் தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு முதலில் வித்திட்டவர் ஒரு அமெரிக்க பெண்தான். வாஷிங்டன் நகருக்கு அருகே உள்ள ஸ்போக்கேன் என்ற ஊரைச் சேர்ந்த சோனோரா தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட். இவரது தாய், தனது 6-வது பிரசவத்தின் போது மரணமடைந்தார். அப்போது,சோனோராவிற்கு வயது 16. ஆனால், ஜாக்சன் ஸ்மார்ட், தம் குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் ஏக்கம் வந்துவிடாதபடி, ஒரு தந்தையாக மட்டுமல்லாது, தாயுமாகி 6 பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தார். தனது தந்தையின் பாசமும்,நேசமும் சோனோராவை அவர் வளர்ந்த பின்னர் நெகிழச்செய்ததோடு, தந்தை குறித்து பெருமிதம் கொள்ள வைத்தது. 1909 ம் ஆண்டில் தனது 27 வது வயதில், அன்னையர் தினத்தை கொண்டாடுவதற்காக தேவாயலம் சென்றார். அப்போது, ஒரு குழந்தையின் வாழ்வில் அன்னையின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ,அதே போல தந்தையின் பங்கும் இருக்கும் போது,ஏன்? தந்தையர் தினமும் கொண்டாடக் கூடாது?” என்ற எண்ணம் உதித்தது. அந்த எண்ணம் உதித்த கையோடு, சோனோரோ தந்தையர் தினத்தை கொண்டாடத் தொடங்கினார். 1972-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்டு நிக்சன் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை ‘தந்தையர் தினம்’ கொண்டாடுவதை உறுதிப்படுத்தினார். அப்போதிருந்து, உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடும் முறை வேகமாக பரவியது.
இன்றைய காலக்கட்டத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும்… ஏனென்றால் அண்மைச்சூழலில், பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. தாயை விட தந்தையை கைவிடும் பிள்ளைகள் இந்திய சமூகத்தில் பெருகிவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று தந்தையர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில், தங்களுடைய குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து, ஆளாக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்கான பொருளாதார பலத்தை அடைவதற்காகவும் தங்களது ஆரோக்கியத்தின் மீது தந்தையர்கள் கவனம் செலுத்துவதில்லை” என்பது தெரியவந்துள்ளது. தன் குழந்தைக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமைதான். ஆனால், அதற்காகத் தன்னுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வது தீர்வாகாது. ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதைத் தந்தையர் உணர வேண்டும். வேலைசார்ந்த அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொள்ள பழக வேண்டும். விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வெளியே செல்வது அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்’ என்றும் வலியுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள். ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் தன் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை காணும்போது தந்தைகளின் துன்பங்கள் பறந்தோடி விடுகிறது. எத்தனையோ சூப்பர் ஹீரோக்கள் திரையில் வந்து போகலாம், ஆனால் ஒரு குழந்தையின் முதல் சூப்பர் ஹீரோ தந்தைதான் தெய்வங்கள் எல்லாம் தோற்றோ போகும் தந்தை அன்பின் முன்னே தங்களின் குழந்தைகளுக்கு ஹீரோவாக இருக்கும் தந்தைகளுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.
Discussion about this post