மகாராஷ்டிரத்தில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்தும், பெரும்பான்மையைக் காட்ட உத்தரவிடக் கோரியும் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் பாஜகவை அரசமைக்க அழைத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமணா, அசோக் பூசண், சஞ்சீவ் கண்ணா ஆகியோரின் அமர்வு, பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதம், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் கடிதம் ஆகியவற்றைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு கடிதங்களையும் உறையில் வைத்து அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா ஒப்படைத்தார்.
ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாகவும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவையில்லை எனவும் துசார் மேத்தா வாதிட்டார். மூத்த உறுப்பினரை அவைத் தலைவராக நியமித்து வீடியோ பதிவுடன் 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, குறித்த நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை நாளை பத்தரை மணிக்கு ஒத்திவைத்தனர்.