அயோத்தி வழக்கு: சன்னி வக்பு வாரியம் திடீர் பல்டி?

அயோத்தி வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற சன்னி வக்பு வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கில் நிர்மோகி அகரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை நிலத்தைச் சம பங்காகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள்தோறும் விசாரித்து வருகிறது. வழக்கின் வாதங்களை அனைத்துத் தரப்பினரும் இன்றுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்து மகாசபா சார்பில் தங்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ளதால் அதற்கு முன் எந்த மனுவையும் ஏற்க முடியாது எனக் கூறி அதை ஏற்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

இதனிடையே அயோத்தி வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள சன்னி வக்பு வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version