தஞ்சையில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை பார்த்த சிறுவர்கள் உட்பட 23 பேரை மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க்கோட்டை அருகே நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் தஞ்சாவூர் அடுத்த குருங்குளத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இவரது கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலைக்காக கடலூர் மாவட்டம் திருவிதிகை ஆயில் மில்லை சேர்ந்த ஏஜென்ட் சேகர் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 23 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்குவதாக புதுக்கோட்டை ஆர்.டி.ஒ.,தாண்டயுதபாணிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தஞ்சை கோட்டாட்சியர் மற்றும் ஆய்வாளர் முத்துகண்ணன் தலைமையிலான குழு விரைந்து சென்று 10 ஆண்கள்,5 பெண்கள், 8 குழந்தைகளை மீட்டது. ஏஜெண்ட் சேகரிடம் பெற்ற கடனுக்காக இவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் ஏஜென்ட் சேகர் மீது ஆந்திரா மற்றும் திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Discussion about this post