தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேட்டில் இந்த ஆண்டும் கரும்பு விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்குமா என்கிற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
பொங்கல் திருவிழாவையொட்டி சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் கரும்பு விளைச்சல் குறைவாகவே காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பருவமழை கைக்கொடுத்தது. எனினும், கோயம்பேடு மார்கெட்டில் எதிர்பார்த்த அளவை விட கரும்பு விற்பனை குறைவாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் விடுமுறையையொட்டி, அதிக அளவிலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளதே இதற்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். விலையை பொருத்தவரை கோயம்பேடு மார்கெட்டில், 15 முதல் 20 கரும்புகள் வரை உள்ள ஒரு கட்டு கரும்பு, 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல், 10 மஞ்சள் கொத்துகள் அடங்கிய ஒரு கட்டு , 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
Discussion about this post