சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுதர்சன நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. உட்கட்சி பூசல் காரணமாக சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறியது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த, தனது மகனுக்கு சீட் கேட்டு ப.சிதம்பரம் ஒருபக்கமும், கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தனக்கு சீட் கேட்டு, மற்றொரு பக்கமும் மேலிடத்திற்கு நெருக்கடி அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கையில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சுதர்சன நாச்சியப்பன், தனக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதை ஆரம்பத்தில் இருந்தே சிதம்பரம் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுதர்சன நாச்சியப்பன், ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுப்பதாகவும், வெளிநாடுகளில் சொத்து குவித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் மக்களவை தேர்தலுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்வது காங்கிரஸ் கட்சிக்கு பாதகம் விளைவிக்கும் என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post