கத்தார் நாட்டின் தோஹாவில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ள திருச்சியை சேர்ந்த கோமதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இந்த வெற்றியை அடைவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி பார்க்கலாம்…
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 15 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள கிராமம்தான் முடிகண்டம். இக்கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து ராஜாத்தி தம்பதியரின் 4 வது மகள்தான் கத்தார் நாட்டில், ஆசிய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள கோமதி.
விவசாயத்தை பிரதானமாக கொண்ட குடும்பத்தில் பிறந்த கோமதி, ஆசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற தகவல் கூட செய்தியாளர்கள் கிராமத்திற்கு வந்த பிறகுதான் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இந்த கிராமத்தில் இருந்து பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் தொடர்வதற்கு அதிகாலை 4 மணிக்கே எழுந்து நடந்து செல்வதும், பேருந்தில் சென்று விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுப்பதும், அவரது வாழ்க்கையில் வாடிக்கையான ஒன்றாகவே இருந்ததாம்.
கோமதியின் வளர்ச்சியில் அவரது தந்தையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் தன் மகள் ஒரு சாதனையாளராக மாற வேண்டும் என்ற முனைப்போடு கோமதிக்கு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருந்துள்ளார். இந்த வெற்றியையும் வளர்ச்சியையும் பார்ப்பதற்கு மாரிமுத்து
இல்லை என்ற கவலை அவரது குடும்பத்தினரிடம் மேலோங்கியுள்ளது.
கோமதியின் இந்த விளையாட்டு ஆர்வத்தை பார்த்த அப்போதைய முடிகண்டம் கிராம நிர்வாக அலுவலரும், தேசிய கால்பந்து நடுவருமான கணேசன் இவருக்கு நல்ல பயிற்சி அளித்தால் சாதனையாளராக வருவார் என்பதை அறிந்து பயிற்சி அளிக்க முயற்சித்துள்ளார். இது தான் கோமதியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சென்று பாராட்டையும் பரிசையும் பெற்றுள்ளார் கோமதி.
தற்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் தடகளப்போட்டியில் ஆசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Discussion about this post