இங்கிலாந்து சிறைபிடித்துள்ள ஈரான் கப்பலில் சிக்கித் தவிக்கும் திருசெங்கோட்டை சேர்ந்த கப்பல் பொறியாளரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய, மின்துறை அமைச்சர் தங்கமணி, அவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் நவீன்குமார், ஈரானில் உள்ள எண்ணெய் கப்பலில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தடையை மீறி சிரியா நாட்டிற்கு கச்சா எண்ணை ஏற்றி சென்றதாக கூறி எண்ணெய் கப்பலை இங்கிலாந்து கடற்படை சிறைபிடித்தது. இதற்கு பதிலடியாக ஈரான் ராணுவம் இங்கிலாந்து சரக்கு கப்பலை சிறைபிடித்துள்ளது.
இங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் நவீன்குமார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நவீன்குமாரை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், நவீன்குமாரின் குடும்பத்தினரை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பொன். சரஸ்வதி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி சிறைபிடிக்கப்பட்டுள்ள நவீன்குமாரை மீட்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post