சிலைகள் வாங்கியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஏற்றுமதியாளர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து 224 சிலைகளைக் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து போயஸ் தோட்டம் கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் வசித்து வரும் பெண் தொழிலதிபர் கிரண் ராவ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.அதில் 23 சிலைகளையும், பழங்காலத் தூண்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் தரப்பினர் அக்டோபர் 9-ஆம் தேதி கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்பினர்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் சார்பில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான தீனதயாளனுக்கும், தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், பழங்காலப் பொருள்களின் மேல் உள்ள ஆசையின் காரணமாக கடந்த 1993-ம் ஆண்டு முதல் இவற்றைச் சேகரித்து வருவதாகவும், இந்தப் பொருள்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் துறையிடமிருந்து முறையான சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,இதுபோன்ற பழங்காலப் பொருள்கள் யாரிடம், எப்போது வாங்கப்பட்டது என்பது தொடர்பான ஆதாரங்களையும், சான்றிதழ்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.