தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தற்காப்புக் கலைகளில் சிலம்பமும் ஒன்று. தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பம் ஆசியா முழுவதும் பரவியுள்ளதோடு, சிலாட் என்ற பெயரில் இந்தோனேசியாவிலும் நடைமுறையில் உள்ளது. இந்திய விளையாட்டு ஆணையமும் சிலம்பத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆனால் சிலம்பத்தை ஒலிம்பிக்கில் சேர்க்க முடியாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த 2018ல் உத்தர விட்டுள்ளது. மேலும் சிலம்பத்தை ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும்கூட சேர்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலம்பத்தை ஒலிம்பிக்கில் சேர்க்க உத்தரவிடக் கோரி அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, இந்த மனு மீது 6 வார காலத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
Discussion about this post