நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
நாங்குநேரி தொகுதிக்கு பிரசாரம் செய்ய வந்த முதலமைச்சருக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து ரெட்டியார்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வர காங்கிரஸ் கட்சியே காரணம் எனவும், தொகுதி மக்களை மறந்து தனது சுயநலத்திற்காக சென்றவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மண்ணின் மைந்தரான அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் அனைத்து நன்மைகளும் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் என்று முதல்வர் குறிப்பிட்டார். மூலக்கரைப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த முதலமைச்சர், மக்களை ஏமாற்றுவதற்காக ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என கூறிய அவர், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், தொகுதிக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
காரியாண்டி பகுதியில் நாராயணனை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகளவிளான நலதிட்டங்களால் பயன்பெற்றது தமிழக மக்கள் மட்டுமே என தெரிவித்தார், திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது எனவும் அவர் கூறினார்.
நாங்குநேரி பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு ஆதரவான திட்டங்களை மட்டுமே அதிமுக அரசு ஆதரிக்கும் என்றும், மக்களுக்கு எதிரானதை, தமிழக அரசு கண்டிப்பாக எதிர்க்கும், அதுதான் எங்கள் நிலைப்பாடு என தெரிவித்தார். மேலும் தமிழக அரசு கேபிள் கட்டணத்தை குறைத்துள்ள போதும், SCV நிறுவனம் கட்டணத்தை குறைக்கவில்லை என விமர்சித்தார்.
Discussion about this post