நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெ.நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உட்பட அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர் நாராயணனை அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதிமுகவின் நல்லாட்சிக்கு ஆதாரமாக மக்கள் இந்த இடைத்தேர்தல் வெற்றியை தந்து இருப்பதாக கூறிய துணை முதலமைச்சர், ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வர மாட்டார் என்பதை இடைத்தேர்தல் வெற்றி உணர்த்துகிறது என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மக்கள் எப்போதும் அதிமுகவிற்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறினார். இந்த வெற்றி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.