தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வரவேற்பு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வரவேற்பதாக கூறினார்.
இதனையடுத்து, முதலமைச்சரின் நடவடிக்கையை வரவேற்ற எதிர்க்கட்சிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 62 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், 50 நாடுகளிலிருந்து வரக்கூடியவர்கள் பூந்தமல்லி பயிற்சி மையத்தில் காய்ச்சல் அறிகுறி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.