முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் குழு அனுப்பி வைக்கப்பட்டு, வறட்சி பாதித்த பகுதிகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு தமிழக அரசு குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில் குடிநீர் தேவையை தெரிந்து கொள்ளாமல் சென்னை நகருக்கு மட்டும் 7 ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எந்தவொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்கமும் பாதிக்கப்படவில்லை என்றும் தனியார் உணவகங்கள், மென்பொருள் நிறுவனங்கள் தடையின்றி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 7 ஆயிரத்து 250 கோடியே 12 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சியில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக 21 ஆயிரத்து 988 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த மூன்றாண்டு ஆட்சியில், 15 ஆயிரத்து 838 கோடி ரூபாயில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, கடும் வறட்சியிலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து, தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 300 மில்லியன் லிட்டர் குடிநீர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதைவிட இது இரண்டாயிரத்து 400 மில்லியன் லிட்டர் கூடுதல் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். சென்னையில் தினந்தோறும் 900 லாரிகள் மூலம் 9 ஆயிரத்து 100 நடைகளில் மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டு வறட்சி பாதித்த பகுதிகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மழைப்பொழிவின்றி கடுமையான வறட்சியினால், சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவது குறித்து அறிந்திருந்தும், இந்த நேரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பை வழங்காமல், மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் செயல்படுவது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.