ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் இரண்டாம் நாளில், நம்பெருமாள், பாண்டியன் கொண்டை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயம்.
இங்கு முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா, 7ம் தேதி மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின், திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் இரண்டாம் நாளான இன்று காலை நம்பெருமாள் தொண்டரடி பொடியாழ்வார் இயற்றிய பாசுரத்திற்கேற்ப, பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன், முத்துச்சரம், வைர அபஹகஸ்தம், பவள மாலை, திருமார்பில் மஹாலட்சுமி பதக்கம், புஜகீர்த்தி, தங்கக்கிளி ஆகிய ஆபரணங்கள் சூடியபடி தங்கபல்லக்கில் எழுந்தருளினார். பிரகாரங்களின் வழியே வந்தபடி கண்ணாடி சேவை கண்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் அவர் சேவை சாதித்தார்.
Discussion about this post