இலங்கை நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, செப்டம்பர் மாதம் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்றிரவு திடீரென அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது. ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும், மே 14ம் தேதி முதல் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 12ம் தேதி முதல், 19ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவி வகித்துவந்த நிலையில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை என ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் வெற்றிவாய்ப்பு அதிகம் இருக்கும் என்ற நோக்கில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post