உலக கோப்பை 7வது லீக் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
உலக கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிமுத் கருணரத்னே, குசால் பெரேரா ஆகியோர் சிறப்பான தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தனர். அடுத்தடுத்து வந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இலங்கை அணி 33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மீண்டும் களம் இறங்கிய இலங்கை அணி 36 புள்ளி 5 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 78 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து டக்வொர்த் லெவிஸ் விதிப்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து ஆப்கான் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ஷாசத் மற்றும் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான், 32 புள்ளி 4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்த நூவன் பிரதீப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Discussion about this post