உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இலங்கை அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இன்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. ரிவர் சைட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இலங்கை அணி சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கருணா ரத்னே மற்றும் பெரேரா ஜோடி, மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சாளர்களை திறமையாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். கருணா ரத்னே 32 ரன்களும், பெரேரா 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து மெண்டிஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய மேத்யூஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதற்கிடையே சிறப்பாக ஆடிய பெர்னாண்டோ 104 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் திரிமன்னே 45 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களை இலங்கை அணி குவித்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் காட்ரெல், தாமஸ், ஆலென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.