கிரிக்கெட் வாழ்க்கையை 100 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் நிறைவு செய்ய விரும்புவதாக வேகபந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இருப்பினும், ஸ்ரீசாந்த் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ரத்து செய்தது. சூதாட்ட விவகாரத்தில் ஸ்ரீசாந்துக்கு உரிய தண்டனையை 3 மாதங்களில் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஸ்ரீசாந்துக்கு 7 ஆண்டுகள் தடை விதிப்பதாக கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் தெரிவித்துள்ளார். இந்த தடை 2013ஆம் ஆண்டில் இருந்து அமலுக்கு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த், 100 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்பவதாக தெரிவித்தார். இந்திய அணியில் மீண்டும் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், விராத் கோலி தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்றார்.
Discussion about this post