நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 5 ம் தேதி கேரளா, அட்டப்பாடி, புதூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்டு இயக்க தலைவர் டேனிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை புளியங்குளத்தை சேர்ந்த டேனிஷை ரகசிய இடத்தில் வைத்து நடத்திய விசாரணையில், மேற்கு தொடச்சி மலை பகுதியில் கொரில்லா தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நீலகிரி மாவட்டத்திற்குள் ஊடுருவதை தடுக்கவும் கேரளா, தமிழ்நாடு எல்லையோர பாதுகாப்பை பலப்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து குன்னூர் பகுதியைச் சேர்ந்த அனைத்து காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அதிரடிப்படையினருக்கு மாவோயிஸ்ட் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் தலைமையில், இப்பயிற்சி அளிக்கப்பட்டது.