விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. சிவகங்கை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து கற்பக விநாயகரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதே போல், திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையிலிடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் மிக பெரிய விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. புலியகுளத்தில் அமைந்துள்ள முந்தி விநாயகர் கோயிலில், ஆசியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்ட 19 அடி உயர விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்து வரும் முந்தி விநாயகரை ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல், புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் வளர்க்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர். ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.