இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்து பிறப்பையொட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை பரங்கிமலையில் உள்ள புனித தாமஸ் பேராயலத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் மாற்று மதத்தினரும் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள புனித சவேரியார் பேராலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சிறப்பு கூட்டுப்பாடல், திருப்பலிக்குப் பிறகு, இயேசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டது. வேளங்கண்ணி கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர்.
வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக புகழ் பெற்ற தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள் பூண்டி மாதா பேராலயத்தில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர்.
கோவையில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். கிறிஸ்து பிறப்பு அறிவித்தவுடன், கிறிஸ்தவ மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேராலயத்தில் வைக்கப்பட்ட குழந்தை ஏசு சொரூபத்திற்கு ஆராதனை நடத்தி அதனை ஏந்திச் சென்று குடிலில் வைத்து வழிபட்டனர்.
சேலம், ஆத்தூர் புனித ஜெயராணி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர். இயேசுவை வழிபட்ட அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்து பிறப்பை வரவேற்று ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனர்.
உதகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு, நள்ளிரவில் பாடல்களுடன் கூடிய பிராத்தனைகள் நடைபெற்றது. தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனை பாடல்களுடன் உற்சாகமாக நடந்தது.