யூ-டியூபில் கானா பாடலை வெளியிட்டு, தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய பிரபல ரவுடிகளை, கோவாவில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பைனான்சியர் கருணாகரன் கொலை வழக்கு, வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி கொன்ற வழக்கு என பல வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி தினேஷ். இவர், காஞ்சிபுரத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி தாதா ஸ்ரீதரின் மைத்துனராவார். தாதா ஸ்ரீதர் இறந்தபிறகு, காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கட்டபஞ்சாயத்து வெடிகுண்டு வீசுதல் போன்ற குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர் தினேசும் அவரது கூட்டாளிகளும்..
இந்நிலையில், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களை மிரட்டவும், பொதுமக்களை அச்சுறுத்தவும் தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்றாக சேர்ந்து கானா பாடல் ஒன்றை யூ டியூபில் வெளியிட்டனர். அந்த பாடலில், ”நாங்கள் தான் காஞ்சிபுரம் டான்” என ரவுடிகளின் புகைப்படங்களுடன், பெயர்களும் வருகிற வண்ணம் அமைத்துள்ளனர்.
இந்த பாடலை தொழிலதிபர்களின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி, அவர்களை பயமுறுத்தி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் இருக்கும் பிரபல சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம்,10 லட்ச ரூபாய் பணம் கேட்டு தினேசும் அவரது கூட்டாளி தியாகுவும் மிரட்டியுள்ளனர். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தினேஷின் ஆதரவாளர்கள் மூன்று பேரை கைது செய்தனர். பின்னர், பிணையில் வெளிவந்த அவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவா தப்பித்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையிலான தனிப்படை கோவா சென்று மாறுவேடத்தில் அங்கேயே தங்கியிருந்து, கடந்த 20 ஆம் தேதி காலை தினேஷ், தியாகு உள்பட 20 ரவுடிகளை துப்பாக்கி முனையில் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து காஞ்சிபுரம் கொண்டு வந்தனர்.
யூ டியூபை பாடல் கேட்க பயன்படுத்துவார்கள், ஆனால் பணம் பறிக்க பயன்படுத்தி இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் காஞ்சிபுரம் கானா ரவுடிகள்.