ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து எரிந்துவரும் காட்டுத்தீயில் சிக்கி கணக்கில்லாத உயிரினங்கள் இறந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்துவரும் காட்டுத் தீயால் அப்பகுதி வானம் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறமாக மாறி காட்சியளிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய காட்டுத் தீ, மூன்று மாதங்களைக் கடந்து தற்போதும் வரை எரிந்துகொண்டே உள்ளது. வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கங்காரு, கோலா கரடி எனப் பல தனித்துவமான காட்டுயிர்களின் சாம்ராஜ்யமான ஆஸ்திரேலியாவை நினைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். காட்டுத்தீயில் பல உயிரினங்கள் உடல் கருகி இறக்கின்றன. ஆஸ்திரேலியாவில் அதிகம் வாழும் மஸ்காட் (mascot) என்று அழைக்கப்படும் கோலாக்கள், நீர் அருந்துவதில்லை. தங்களுக்குத் தேவையான நீரை, யூகலிப்டஸ் இலையிலிருந்தே எடுத்துக்கொள்ளும்.ஆனால், குழந்தைகளைப்போல கோலாக்கள் நீர் அருந்தும் காட்சி சமீபத்தில் வைரலானது. கோலாக்களுக்கு ஏற்பட்ட நிலைகண்டு பலரும் கண்ணீர் வடித்தனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி இதுவரை பல லட்சம் உயிரினங்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிரே ஃபார் ஆஸ்திரேலியா என்ற ஹாஸ்டாக் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.
பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் தங்களை நோக்கிவரும் தீயைப் பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கும். ஆனால், அதிக தூரம் செல்ல முடியாத சிறிய உயிரினங்கள் நிச்சயம் காட்டுத்தீயில் சிக்கியிருக்கக் கூடும்’ என ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பாட்லோவ் (Batlow) ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. நகரத்தையும் பாட்லோவையும் இணைக்கும் ஒரே ஆதாரமாக இருக்கும் நெடுஞ்சாலை வழியாகப் பயணித்த ஆஸ்திரேலியா ஊடகத்தைச் சேர்ந்த ஒருவரின் கேமராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் வானம் முழுவதும் அடர்ந்த புகைமூட்டத்துடன் உள்ளது, கீழே தரையில் நூற்றுக்கணக்கான கறுப்பு நிற கருகிய உடல்கள் கிடக்கின்றன. அவை அனைத்தும் கங்காரு, கோலா கரடிகள் மற்றும் செம்மறி ஆடுகளின் உடல்கள். காட்டுத் தீயின் கோரத்திலிருந்து தப்பிக்க முடியாமல் இவை சாலை வரை வந்து உயிரிழந்துள்ளன.
ஆஸ்திரேலியா காட்டுத்தீ தொடர்பாகவும் கோலாக்கள் தொடர்பாகவும் வெளியான வீடியோ, புகைப்படங்கள் போன்றவை மொத்த உலகத்தையும் உறையவைத்துள்ளன.
Discussion about this post