பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரசால் நிலை குலைந்துள்ள நிலையில், தென்கொரிய அரசு நோய் பரவலை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. மேலும், உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் தென்கொரியா விளங்குகிறது. நாடு தழுவிய ஊரடங்கு.. வீழ்ச்சியை நோக்கி செல்லும் பொருளாதாரம்.. வீடுகளிலேயே முடங்கி உள்ள பொதுமக்கள்..தொடர்ந்து அதிகரித்து வரும் நோய் பாதிப்பு.. இவைதான் பெரும்பாலான நாடுகளின் தற்போதைய நிலையாக உள்ளது. ஆனால், ஆசிய நாடான தென்கொரியாவில் நிலைமையே வேறு. நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு இல்லை. பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்திக்கவில்லை. உணவகங்கள் உள்ளிட்டவை திறந்தே உள்ளன. கட்டுப்பாடுகளுடன் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இத்தனைக்கும் மேலாக, கொரோனா களேபரத்திற்கு இடையில் நாடாளுமன்ற தேர்தலையே நடத்தி முடித்துள்ளது தென்கொரியா. அத்துடன், கொரோனா நோய் பாதிப்பையும் தென்கொரியா கணிசமாகக் குறைத்துள்ளது. இத்தனையையும் அந்நாட்டு அரசு எவ்வாறு சாத்தியப்படுத்தியது என்பதை பலரும் ஆராய தொடங்கியுள்ளனர்.
தொடக்கத்தில், ஆசியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக தென்கொரியா இருந்தது. குறிப்பாக, பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்கொரியா இருந்தது. ஆனால், அந்நாட்டு அரசின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக நோய் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிற நாடுகளில் இல்லாத அளவில் தென்கொரியாவில் தினமும் 20,000 பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் தென்கொரியாவில் சிறப்பான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெரும்பாலான இடங்களில் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவி வைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை அதிகமாக உள்ள மக்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, பல பகுதிகளில் கைகளை சுத்திகரிக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்கொரியாவில் coronaita.com என்ற தளமும் பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. அந்த தளத்தில் ஒருவர் தான் இருக்கும் இடத்தை பதிவிட்டால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை அறிய முடியும். இத்தகைய காரணங்களால் 5 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட தென்கொரியாவில், சுமார் 11,000 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். “சோதனை செய், கண்டுபிடி, கட்டுப்படுத்து” என்ற வழிமுறையை தென்கொரியா பின்பற்றி வருகிறது. அதன்படி மார்ச் மாதத்தின் இடைப்பகுதியில் 2,70,000க்கும் மேற்பட்டோருக்கு அந்நாட்டு அரசு பரிசோதனை செய்து முடித்தது. நோய் பரவலை கட்டுபடுத்த இது பெரியளவில் உதவியதாக கூறப்படுகிறது. மேலும், தென்கொரியா வலுவான உற்பத்தி தளத்தையும் கொண்டுள்ளது. அதன் காரணமாக பாதுகாப்பு உபகரணங்கள் போதியளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொரிய மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கின்றனர். முக கவசம் அணியாதது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பூஜ்ஜியம் என்ற அளவில் குறைப்போம் என அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post