தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்குகளை எண்ணவோ முடிவுகளை வெளியிடவோ கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால், மயிலாப்பூரில் உள்ள புனிய எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு மட்டுமே இன்று நடைபெறுகிறது. 3,171 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலையொட்டி சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முப்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு படிவம் தாமதமாக கிடைத்ததாகவும், தபால் படிவம் சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு வந்ததால், வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வாக்கு படிவத்தை முன்கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் காலங்களில் இது போன்ற துரதிருஷ்டவசமான நிலை ஏற்படக் கூடாது எனவும் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post