இந்தியாவிற்கெதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 254 ரன்கள் குவித்தார். மயங்க் அகர்வால் 108 ரன்களும், ஜடேஜா 91 ரன்களும் குவித்தனர். இதனால் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில், 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில், தென் ஆப்பிரிக்கா ரன் எடுக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த தென் ஆப்பிரிகா அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளிசிஸ் 64 ரன்கள் எடுத்தார். 9 வது விக்கெட்டுக்கு ஃபிலாந்தருடன் இணைந்த மகாராஜ் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் குவித்தார். இந்த இணை 9 வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்து வியக்க வைத்தது. இந்நிலையில், 105 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Discussion about this post