உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது ஆட்டத்தில் இலங்கையை அணியை தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ மற்றும் பெரெரா தலா 30 ரன்களை எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை பிரிட்டோரியஸ் மற்றும் மோரிஸ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், அம்லா களமிறங்கினர். டி காக் 15 ரன்களுடன் நடையைக் கட்ட, பின் களமிறங்கிய டு பிளிஸ்சிஸ், அம்லா ஜோடி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதனால் 37.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
அம்லா 80 ரன்களுடனும், டு பிளிஸ்சிஸ் 96 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். உலக கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி பெற்றுள்ள 2-வது வெற்றி இதுவாகும். உலக கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே வெளியேறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.