மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் கூறியும் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக காரியக் கமிட்டிக் கூட்டம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
1998ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தார். காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தபோது 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post