நீட் தேர்வு மூலம் தேர்வாகி முதலாமாண்டு மருத்துவம் படித்துவரும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர், கல்வி கட்டணம் செலுத்த பணமில்லாமல் தவித்து வந்த நிலையில் அவரது படிப்பு செலவிற்காக நிதி வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடகுரும்புர் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற கூலித் தொழிலாளி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் மணிகண்டன் நல்ல முறையில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.
தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியோடு கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் கட்டி முதலாம் ஆண்டு படித்து வந்த மணிகண்டனுக்கு, இரண்டாம் ஆண்டு தொடர்ந்து கல்வி கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையறிந்த, உளுந்தூர்பேட்டையில் உள்ள பல்வேறு சமூக நல அமைப்பினர்களும் ஒன்று சேர்ந்து, 44 ஆயிரத்து 500 ரூபாய் பணம் திரட்டி அந்த மாணவனிடம் வழங்கினர்.