ராமநாதபுரம் மாவட்டத்தில் நட்பாக பழகி பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி கும்பல் ஒன்று பெண்களை மிரட்டி பணம் பறிப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சமூக வலைதளம் மூலம் நடைபெறும் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்தனர். அதில், ஜெர்மனியில் பொறியியல் பயிலும் முகமது முகைதீன் என்பவர் தலைமையில் மோசடி கும்பல் ஒன்று செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம் எளிதில் நட்பாகும் முகமது முகைதீன் அவர்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியதும் இதுவரை பல பெண்களிடம் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறித்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜாசம் கனி, மற்றும் பார்டு பைசல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post