இன்று உலகமே தொலைபேசியில்தான் ஊடுறுவி கொண்டிருக்கிறது என்பது அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடிய ஒரு உண்மை அந்த வகையில் தற்போது மக்களிடையே பல்வேறுபட்ட செயலிகள் உலா வருகின்றன. யூடியூப், டிக்டாக், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என இணையப் பயன்பாடுகளும் எல்லை கடந்து விரிவடைந்துவிட்டன. இத்தனை பெரிய வரப்பிரசாதத்தை வெறுமனே அரட்டை அடிக்கவும் பொழுதுபோக்கவும் மட்டுமே பயன்படுத்தாமல் நல்ல கருத்துகளை மக்களுக்கு பதிவு செய்யவும் சிலர் தொலைபேசியை உபயோகிக்கின்றனர். அந்த வகையில் இன்று ஏராளமானோர் யூடியூப் கணக்கு தாமாகவே தொடங்கி நிறைய வருமானம் பெற்று வருகின்றனர். அவர்களில் மும்பையைச் சேர்ந்த பிரஜக்தா கோலி பிரபலமானவர். தற்போது யூடியூப் இணையத்தில் இந்தியாவின் இணைய ராணியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பிரஜக்தா.
மும்பை பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறையில் பட்டம் பெற்ற பிரஜக்தா, எஃப்.எம். ரேடியோவில் தொகுப்பாளினியாக இரு ஆண்டுகள் பணியாற்றினார். இவருடைய நகைச்சுவைப் பேச்சைக் கேட்கவே நேயர் கூட்டம் உருவானது. ஒரே பணி இவருக்கு அலுத்துப்போகவே, மாற்றத்துக்காகக் காத்திருந்தார். அப்போதுதான் நடிகர் ஹிர்த்திக் ரோஷனை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தார் பிரஜக்தா. இந்தச் சந்திப்பை வீடியோவாகத் தனது முகநூலில் பகிர்ந்தார். அந்த வீடியோவுக்கு நிறைய லைக்குகள் குவிந்தன.
அந்த வீடியோவுக்குக் கிடைத்த வரவேற்பு, பின்னாளில் பிரஜக்தாவைச் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கவைத்தது. பின்னர் 2015-ல் ‘Mostlysane என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கிய பிரஜக்தா கடந்த 4 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றம் செய்துள்ளார்.
பிரஜக்தாவின் உணர்வுபூர்வமான நடிப்பு, கலகலப்பான இருவேட நகைச்சுவை நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இதன் காரணமாகவே தற்போது அவரது யூடியூப் கணக்கில் 47 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.
ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட செல்வாக்குமிக்க 30 வயதுக்குக் குறைவான நபர்களில் பிரஜக்தாவும் ஒருவராக திகழ்கிறார். தனிச்சையாக யூடியூப் கணக்கு தொடங்கிய பிரஜக்தா கோலி தற்போது ‘இணைய ராணியாக’ வலம் வருவது புதிதாக யூடியூப் கணக்கு தொடங்கிய பெண்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. சமூக வலைதளங்கலில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ஒரு உந்துசக்தியாக பிரஜக்தா திகழ்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Discussion about this post