ஸ்மார்ட் பல்புகள் எனப்படும் அடுத்த தலைமுறை மின்விளக்குகள் இந்த ஆண்டில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. இந்த பல்புகள் மூலம் வீட்டுக் கணினியில் உள்ள தகவல்களைத் திருட முடியும் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போதைய ஆய்வுகளில் வெளியாகி உள்ளது.
இணையம் அல்லது வைஃபை இணைப்பு மூலம் கட்டுப்படுத்தக் கூடிய மின்விளக்குகளுக்கு ஸ்மார்ட் பல்புகள் என்று பெயர். இவற்றில் 160 லட்சம் நிறங்கள் உள்ளன. இவற்றின் நிறத்தையும் வெளிச்சத்தின் அளவையும் செயலி மூலம் மாற்றி அமைக்க முடியும். இவை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கக் கூடியவை என்று சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டில்தான் ஸ்மார்ட் பல்புகள் முதன்முதலாக சந்தைக்கு வந்தன. 800 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இவை விற்றுத் தீர்ந்தன. இந்தியாவில் ஸ்மார்ட் பல்புகள் இந்த ஆண்டுதான் சந்தைக்கு வந்தன. இந்த ஆண்டில் உலகெங்கும் இவற்றின் விற்பனை 3 மடங்குகளுக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பல்புகளால் வீடுகள் ஸ்மார்ட் வீடுகளாக மாறும் என்று விளம்பரங்கள் கூறுகின்றன. ஆனால் உண்மை நிலவரமோ அச்சமூட்டுகின்றது. இதற்கு முன்பு வீடுகளை ஸ்மார்ட்டாக மாற்றுவதாகச் சொல்லி சந்தைக்கு வந்த கூகுள் எக்கோ சாதனம், தனது வாடிக்கையாளர்களின் குரல் பதிவுகளை வெளியிட்டு சமீபத்தில்தான் அதிர்வலைகளை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக ஸ்மார்ட் பல்புகளில் உள்ள அபாயம் தற்போது தெரிய வந்துள்ளது.
ஸ்மார்ட் பல்புகள் இன்ஃபிரா-ரெட் எனப்படும் அகச் சிவப்புக் கதிர்களால் இயங்கக் கூடியவை. இந்த அகச் சிவப்புக் கதிர்களைக் கொண்டு ஹேக்கர்களால், வீட்டின் கணினியில் உள்ள தகவல்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைத் திருட முடியும். இதற்காக தனியாக இணையம் கூட தேவை இல்லை, வீட்டில் உள்ள வைஃபை இணைப்பு மூலமே இந்தத் திருட்டை ரகசியமாக செய்துவிட முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விரிவுரையாளர் மர்டூஸா ஜாடில்வாலா (Murtuza Jadliwala) தனது கட்டுரையில் கூறியது,அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் டிவிக்கள் மூலம் வீடியோக்கள் திருடப்படுவது, ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் குரல் பதிவுகள் திருடப்படுவது ஆகியவற்றின் வரிசையில், இப்போது ஸ்மார்ட் பல்புகளும் ஆவணங்களைத் திருடும் என்பது தெரியவந்துள்ளது. இனி மக்கள்தான், ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது அவசியமா? அல்லது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமா? – என்பதை முடிவு செய்ய வேண்டும்.
Discussion about this post