நமக்குப் பிடித்தமான வேலையைக் கனவு வேலை என்று சொல்வது உண்டு. ஆனால் கனவு காண்பது மட்டுமே ஒரு நிறுவனத்தில் வேலையாக உள்ளது. தினமும் 9 மணி நேரம் தூங்கினால் ஒரு லட்சம் சம்பளம் தரும் ஒரு வேலை.
பெங்களூருவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வேக்ஃபிட் (wakefit) என்ற மெத்தை நிறுவனத்தின் அறிவிப்பு ஒன்று சமீப நாட்களாக சமூக வலைத் தளங்களை கலக்கி வருகின்றது. ’வேக்ஃபிட் ஸ்லீப் இண்டர்ன்ஷிப்’ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி, தூக்கத்தின் மீது ஆசையும், ஆர்வமும், காதலும் உள்ளவர்களுக்கு தினமும் 9 மணி நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் உறங்குவதற்காக 100 நாட்களுக்கு 1 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலையில் சேர்பவருக்கு சில நிபந்தனைகளும் உண்டு. இவர்கள்வேக்பிட் நிறுவனத்தில் ஒதுக்கப்படும் இடத்தில்தான் தூங்க வேண்டும். அங்கு லாப்டாப் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது, தூக்கத்தின் மீதான ஆர்வம், ஆசை குறித்து தினமும் வீடியோ ஒன்றை எடுத்து அனுப்ப வேண்டும். இவர்கள் தூங்குவது ஸ்லீப் டிராக்கர் கருவி மூலம் கண்காணிக்கப்படும், தூங்குபவருக்கு நவீன உடற்பயிற்சிகள், மருத்துவர்களின் ஆலோசனைகள் வழங்கப்படும். இவற்றைப் பின்பற்ற வேண்டும். 100 நாட்களுக்கு தொடர்ந்து இந்த விதிகளை சரியாகப் பின்பற்றி தூங்குபவருக்குத்தான் 1 லட்சம் வழங்கப்படும்.
முதலில் அறிவிப்பை பார்த்தவுடன் ஆர்வமான இணையதளவாசிகள், இந்த நிபந்தனைகளைப் பார்க்கும் போது சற்று தயக்கம் காட்டுக்கிறார்கள் என்பது உண்மை. எதற்காக இந்த வேலையை வேக்ஃபிட் நிறுவனம் உருவாக்கி உள்ளது? – என்று இந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் இணை இயக்குநர் சைத்தன்யா ராமலிங்க கவுடா கூறும் போது, பொதுமக்கள் நிம்மதியான தூங்குவதை ஊக்குவிக்கவே இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். தூக்கமின்மை மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
தூக்கத்திற்காக எல்லா வேலையையும் விட்டுவிட்டு, எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்களைத்தான் நாங்கள் தேடி வருகிறோம். அவர்களுக்கே வேலையில் முன்னுரிமை – என்று கூறி உள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் மக்களின் தூங்கும் பழக்கம் அதிகரித்து உள்ளதோ இல்லையோ, இந்த நிறுவனம் இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளது என்பதுதான் உண்மை.
Discussion about this post