கர்தார்பூருக்கு பாதை அமைத்ததன் மூலம், 70 ஆண்டுகால பிரச்சினைக்கு தமது நண்பர் இம்ரான்கான் முடிவு கண்டிருப்பதாக, நவ்ஜோத்சிங் சித்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருவான குருநானக் தேவ் கி.பி.1521-ம் ஆண்டு வாழ்ந்த இடமான கர்தார்பூருக்கு சாலை அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு பிரபல கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கான், தமது நண்பரும், பஞ்சாப் அமைச்சருமான சித்துவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற சித்து, 70 ஆண்டுகால சர்ச்சைக்கு தமது நண்பர் இம்ரான் முடிவு கண்டிருப்பதாக கூறினார். இந்தக்கோயில், லாகூரில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்திய எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டத் தொலைவிலும் அமைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து அதிகளவில் சீக்கியர்கள் செல்வார்கள் என்றும் சித்து கூறினார். லட்சக்கணக்கான சீக்கியர்களின் கண்ணீரை, தமது நண்பர் இம்ரான்கான் துடைத்துவிட்டதாக சித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கத்தியும் ரத்தமும் இன்றி, வலியும் வேதனையும் இன்றி அமைதி மட்டும் திரும்பியுள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் தேர்தலில் நின்றால், சித்து வெற்றிபெறுவார் என்று கூறினார். இந்த நிலையில், இந்தியா திரும்பியுள்ள சித்துவுக்கு எதிராக புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. இதனிடையே, பஞ்சாபை தனியாக பிரிக்கக்கோரும் காலிஸ்தான் தலைவர்களில் ஒருவரான கோபால் சிங் சாவ்லாவும், சித்துவும் சந்தித்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post