சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வசீம் தனது மனைவி அப்ரினுடன், வந்தவாசிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். தங்களது பேக்குகளை கீழே வைத்து பயணத்தை மேற்கொண்டிருந்துள்ளனர். தென்னாங்கூர் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது, கைக்குழந்தையுடன் அமர்ந்து வந்த மூன்று பெண்கள் வசீமின் பேக்கை நைசாக திறந்துள்ளனர். இதனை கவனித்த அப்ரின், கணவரிடம் சொல்ல, வசீம் இது தொடர்பாக கேட்டதும், பதறியடித்த பெண்கள் உடனடியாக பேருந்தை நிறுத்தச் சொல்லி சத்தமிட்டுள்ளனர். பேருந்தை நின்றதும் அவர்கள் வேகமாக இறங்கிச் செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கரவாகனத்தில் மூவரில் ஒரு பெண் ஏறி தப்பிச் செல்ல, மற்ற இருவரையும் சக பயணிகள் மடக்கி விசாரிக்கத் தொடங்கியதோடு, வந்தவாசி போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் இரண்டு பெண்களையும் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்று ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த அகிலா மற்றும் அவரது சகோதரி ஆரிக்கா என்றும், தப்பிச் சென்றவர் சரண்யா என்பது தெரியவந்தது. திருடும் நோக்கத்தில் பேக்கை திறந்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் கோவில் கும்பாபிஷேகம், திருவிழாக்கள் உள்பட மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களிலும், பேருந்துகளிலும் கைவரிசை காட்டி வந்த சகோதரிகள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததும், அவர்கள் வைத்திருந்த ஆதார்கார்டு போலியானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களையும் கைது செய்த போலீசார் கைக்குழந்தையுடன் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post