அசோக் செல்வன், மணிகண்டன், அபி ஹாசன், பிரவீன் ராஜா, நாசர், ரித்விகா, ரியா, கே.எஸ். ரவிக்குமார், பானுப்ரியா, இளவரசு என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் விஷால் வெங்கட் இயக்கியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்.’
மனிதர்களின் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள், நினைத்துப் பார்க்க முடியாத பல அனுபவங்களையும் புரிதல்களையும் ஒருசேரத் தந்துவிடும்.
அதுவும் இழப்புகளின் வழியே கிடைக்கும் படிப்பினைகள், காலத்துக்கும் மறக்க முடியாத சுவடுகளாக மனதில் பதிந்துவிடும். அப்படியாக இங்கே வெவ்வேறு சூழலில் நான்கு மனிதர்களுக்கு நிகழும் கதை, ஒரே புள்ளியில் இணைவதின் தொகுப்பாக உருவாகியுள்ளது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்.’
அன்பை மற்றவர்களிடம் வெளிக்காட்டத் தெரியாத அசோக் செல்வன், எப்போதும் எரிச்சலுடனே தனது அப்பா நாசர், காதலி ரியாவை அணுகுகிறார்.
அவருக்கும் ரியாவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கும் தருணத்தில் நாசரின் வேண்டுகோளை அசோக் செல்வன் புறக்கணிக்க, அதுவொரு விபத்தில் முடிகிறது. அதிலிருந்து மீள்வதுடன் தனது தவறை அசோக் செல்வன் உணர்ந்தாரா? என பேசுகிறது ஒரு கதை.
இன்னொரு பக்கம் தனது பொறுப்பின்மையால், ரிசார்ட்டில் மேனேஜராக முடியாமல் ரூம் க்ளீனிங் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் மணிகண்டன்.
அதே மனநிலையுடன் அவர் செய்யும் செயலால் விபத்து நேரிட, குற்றவுணர்ச்சியால் அவர் படும் பாடும், அதன்பிறகு அவருக்குள் ஏற்படும் மாற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறது அடுத்த கதை.
அடுத்து முன்னணி இயக்குநரான கே.எஸ். ரவிகுமாரின் மகன் அபி ஹாசன் நடிகனாக அறிமுகமாகிறார். முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டில் அவர் பேசுவது சர்ச்சையாக, அன்றிரவே விபத்தை ஏற்படுத்தியவர் என்ற சூழ்நிலை கைதியாக அறைக்குள் முடங்கிக் கிடக்கிறார்.
அதேபோல் ஆடம்பர வாழ்விற்குள் சிறைபட்டு கிடக்கும் பிரவீன் ராஜா, அமெரிக்கா செல்லும் கனவுடன் மனிதனுக்கான சுயத்தை இழந்து நிற்கிறார். இறுதியாக அவரும் விபத்து மூலம் வாழ்க்கைப் பாடத்தை கற்பிக்க வேண்டிய சூழல் உருவாகிறது.
ஒரேயொரு விபத்து நான்கு மனிதர்கள் தங்களது சுயத்தையும் தவறுகளையும் உணர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா? என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக படமாக்கியுள்ளனர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படக்குழுவினர்.
மனித உறவுகளுக்குள் எழும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களை முதன்மையாக வைத்து, அவைகளின் சுயபரிசோதனையாக அமைந்துள்ளது திரைக்கதை.
முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி நல்ல அழுத்தமான திரைக்கதையால் ரசிகர்களை கட்டிப் போடுகிறது. பாத்திரங்களின் தேர்வும் அவர்களின் முதிர்ச்சியான நடிப்பும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் பெரும் பலம் எனலாம்.
எல்லாரிடமும் சிடு சிடுவென எரிந்துவிழும் விஜய் என்ற பாத்திரத்தில் அசோக் செல்வன் மிகச் சரியாகப் பொருந்தி நிற்கிறார். அவரது பாத்திரத்தின் நீட்சியாகவும் மற்றொரு எளிய மனிதராகவும் ராஜசேகர் என்ற பாத்திரத்தில் வருகிறார் மணிகண்டன்.
கதை என்ன பேச நினைத்ததோ, அதனை இவரது பாத்திரம் முழுமையாக செய்து முடிக்கிறது. அபி ஹாசனின் திரைப்பயணத்தில் இந்தப் படம் மிக முக்கியமானதாக இருக்கும். அறிமுக நடிகர், தந்தையின் அனுபவத்தை மதிக்காத மகன், நுணிநாக்கில் ஆங்கிலம், யூடியூபர்களின் கண்டெண்ட் என பல வெரைட்டியை அபியிடம் பார்க்க முடிகிறது.
பிரவீன் ராஜா, ரித்விகா இருவரும் ஜோடியாகவே ஸ்கோர் செய்து அசத்துகின்றனர். அசோக் செல்வன் ஜோடியாக நடித்திருக்கும் ரியா, அவரின் நண்பனாக வரும் இளைஞர், இளவரசு, பிரவீன் ராஜாவின் வக்கீல் நண்பன், கே.எஸ். ரவிகுமார், பானுப்ரியா என அனைவருமே தங்களது பாத்திரத் தன்மையை முழுமையாக உணர்ந்து நடித்துள்ளனர்.
மிக முக்கியமாக நாசரின் முதிர்ச்சியும் அனுபவமும் நிறைந்த செல்வராஜ் பாத்திரம், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ஆன்மாவாக உள்ளது. அவரிடம் இருந்தே தொடங்கும் படம், இறுதியில் அவரது பின்னணிக் குரலோடு நிறைவடைவது சூப்பர் டச்.
மணிகண்டனின் வசனம், ரதனின் இசை, மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு என மற்ற கலைஞர்களும் நிறைவான பங்களிப்பைத் தருகின்றனர். விஷால் வெங்கட் தனது முதல் படத்திற்கான உழைப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார், ஆனாலும் சில இடங்களிலும் படமாக்கிய விதத்திலும் கொஞ்சம் புதுமையாக முயற்சித்திருக்கலாம்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உணர்ச்சி மிகு கதைகளின் சங்கமம்
– அப்துல் ரஹ்மான்
Discussion about this post