கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், வட சென்னைப் பகுதியில் இரண்டாவது சித்த மருத்துவ மையத்தை அமைத்துள்ள தமிழக அரசு, லேசான அறிகுறி உள்ளவர்கள், சித்த மருத்துவ மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்ல வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு…
கொரோனா வைரஸ்… கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரி… கடந்த ஐந்து மாதங்களாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல், வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்கள், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், திண்டாடிக் கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில், தமிழகம் மட்டும் கொரோனாவுக்கு எதிரான போரில், முன்னணியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறது.
முறையான மருத்துவப் பரிசோதனைகள்… சிகிச்சைகள்… வழிகாட்டு நெறிமுறைகள்… சிகிச்சையில் மாற்று வழிமுறைகள் என நாள்தோறும் புதுப்புது முயற்சிகளை, தமிழக அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தையும் பயன்படுத்த நினைத்த தமிழக அரசு, சித்த மருத்துவ மையத்தை அமைத்தது. ஏற்கெனவே, சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ மையம் அமைத்து, கொரோனா நோயாளிகளை சிறப்பான முறையில் குணப்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது வடசென்னைப் பகுதியில் இரண்டாவது சித்த மருத்துவ மையத்தை அமைத்துள்ளது.
தண்டையார் பேட்டை மண்டலம், வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரியில் தமிழக அரசின் இரண்டாவது சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பணிகள் முடிந்து, சிகிச்சை அங்கு தொடங்கப்பட்டுவிட்டது. மருத்துவர்கள் சசிக்குமார், தணிகைவேலன், இளஞ்சேரன், கண்ணன், சாய் சதீஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு அங்கு சிசிக்சை அளித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று உள்ளவர்களில், உடல் உபாதைகள் மற்றும் பாதிப்புகள் குறைவாக உள்ளவர்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு பணியாற்றும், சித்த மருத்துவர் கண்காணிப்புக் குழுவுடன், அலோபதி மருத்துவர் ஒருவரும் உடன் இருந்து சிகிச்சைகளுக்கு வழிகாட்டுகிறார். நல்ல காற்றோட்டமான சூழலில், மூன்று தளங்களுடன், 230 படுக்கை வசதிகள் உள்ள அறைகளுடன் தண்டையார்பேட்டை சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தளத்திலும், மற்றும் அந்தந்த தளங்களில் உள்ள அறைகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றனர். அதுபோல, மருத்துவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி, மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஸ்பீக்கர் வசதி, நோயாளிகளுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி, மூலிகை குளியல் வசதி, வேது பிடித்தல் உள்ளிட்ட வசதிகள் இந்த சித்த மருத்துவ மையத்தில் செய்யப்பட்டுள்ளன. சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் வாங்கிக் கொடுக்கப்படாமல், அங்கேயே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.
காலை ஆறு மணிக்கு உப்பு தண்ணீரில் தொண்டையைச் சுத்தம் செய்தல், நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, மூலிகை சிற்றுண்டி, மதியம் நோய்க்காப்பு சித்த உணவு, மாலை வேளையில் மீண்டும் உப்புத் தண்ணீரில் தொண்டையைச் சுத்தம் செய்தல், மாலை நடைபயிற்சி, இரவு மூலிகை சிற்றுண்டி என இங்கு சிகிச்சை முறைகள் வகை பிரிக்கப்பட்டுள்ளன.
சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் உணவில், உளுந்து சாதம், சாம்பார், மிளகு ரசம், வாழைப்பூ பொரியல், பொன்னாங்கன்னிக் கீரைக் கூட்டு, சீரக மோர்த் தண்ணீர் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. மேலும், அதிமதுரம், நொச்சி குடிநீர், ஆடாதோடை, மணப்பாகு உள்ளிட்ட சித்த மருத்துவ மூலிகைகளும் நோயாளிகளுக்கு தரப்படுகின்றன. திறந்த வெளியில் யோகாசனப் பயிற்சி, சூரிய குளியல் உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
அறிகுறி இல்லாமல்… அல்லது லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள், சித்த மருத்துவ மையத்தை அணுகி, சிகிச்சை பெற்று நான்கு நாட்களில் பூரண குணம் பெற்று வீடு திரும்பலாம் என்றும், வடசென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், அந்தப் பகுதி மக்களுக்காகவே இந்த சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இந்த மருத்துவ மையத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சித்த மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றைக் கண்டு, மக்கள் அச்சம் கொள்ளாமல், அரசாங்கம் சொல்லும் நெறிமுறைகளையும், வழிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடித்தலும், அரசாங்கம் செய்து கொடுத்துள்ள மருத்துவ வசதிகளை முறையாகப் பயன்படுத்திவதுமே, கொரோனாவை வெல்வதற்கு இப்போதைக்கு மக்களிடம் உள்ள ஒரே வழி.
Discussion about this post