ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் சுப்மான் கில், நடுவரின் முடிவுக்கு எதிராக நடந்து கொண்டதால், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் இளம்வீரர் சுப்மான் கில். தற்போது, ஐ.பி.எல். மற்றும் இந்திய ஏ அணி உள்ளிட்டவைகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடருக்கான, லீக் ஆட்டம் ஒன்றில் டெல்லி அணியை எதிர்த்து விளையாடினார். பஞ்சாப் அணி சார்பாக, தொடக்க வீரராக மிறங்கிய கில், பந்தை அடிக்க முயன்ற போது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதால், களத்தில் இருந்த நடுவர் முகமது ரபி, அவுட் என்று அறிவித்தார். ஆனால், பந்து பேட்டில் படவில்லை என்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கில், மைதானத்தை விட்டு வெளியேற மறுத்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து, லெக் அம்பயர் ஆலோசனைக்கு பிறகு சுப்மான் கில் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த டெல்லி அணி வீரர்கள், வெளிநடப்பு செய்ய முயற்சித்ததால், போட்டி பத்து நிமிடம் வரை பாதிக்கப்பட்டது.
இந்திய அணி வீரர் சுப்மான் கில், நடுவர் முகமது ரபியுடன் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்திய போட்டி நடுவர் ரங்கநாதன், விதிமுறைகளுக்கு எதிராக நடந்துக் கொண்ட கில்லுக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டார். இதேபோல், போட்டியின் உத்வேகத்தை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட டெல்லி அணி வீரர் துருவ் ஷோரேய்க்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
Discussion about this post